link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space

ஞாயிறு, 4 ஜூன், 2023

சிறுபாணாற்றுப்படையில் பாணனின் வறுமை

     

    

              சிறுபாணாற்றுப்படை 


சங்க இலக்கிய நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் மூன்றாவதாக அமைந்துள் நூல் சிறுபாணாற்றுப்படை ஆகும்.

சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் ஆவார்.

இந்நூல் மொத்தம் 269 அடிகளைக் கொண்டதாகும்.

ஓய்மாநாட்டு நல்லிமக் கோடனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூலாகும்.

நல்லியக்கோடனனிடம் பரிசில் பெற்ற சிறுபாணன் வழியில் வரும் இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததே சிறுபாணாற்றுப்படை ஆகும்.

ஆற்றுப்படுத்துவது என்றால் நெறிப்படுத்துதல் என்ற பொருள். வழியில் வரும் பாணனை நல்லியக்கோடனிடம் சென்றால் உமக்கும் பொருள் கிடைக்கும் அதனால் வறுமை நீங்கும் என்று கூறுவதே ஆகும்.


பாணனின் வறுமை

                                    சிறுபாணன் நடந்துச் செல்லும் அவ்வழியானது மிகவும் கொடியது என்றாலும் அந்த வழியில் தான் சென்றாகவேண்டும். ஏனெனில் தன் பசியைப் போக்க பரிசில் வருவோரை தேடிச் செல்ல வேண்டும். இதுவே பாணனின் வாழ்வியல் நிலையாக உள்ளது எனலாம்.

............................. விண்ணா 

டிறவாக் கண்ண சாய்செவிக் 

குருவை...

கறவாப் பான்முலை கவர்த

நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ

னனட்டிற்.

என்ற பாடல் வரிகளின் மூலம் பாணனின் வறுமையை அறியமுடிகின்றது.

இந்தப் பாடல் வரிகளின் மூலம் பாணனின் அடுப்பங்கரை எவ்வாறு உள்ளது என்பதை அறியமுடிகிறது.

நாய்கள் பொதுவாக குட்டிகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் ஈனும் ஆனால் இங்கோ அடுப்பங்கரையில் குட்டிகளை ஈன்று இருக்கிறதென்றால் பாணன் வீட்டில் சமைக்க அடுப்பங்கரைக்கு சென்று எவ்வளவு நாள் ஆகியிருக்கும் என்ற வறுமை நிலையை இதன் மூலம் அறியலாம். அடுப்பங்கரையில் கண்களை திறக்காத அந்த நாய் குட்டிகள் தாயின் மடியில் பால் குடிக்கின்றன. ஆனால் தாயோ வற்றிய முலையுடன் இருப்பதால் வலியைக் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. வறுமையின் காரணமாக நாய்களும் உணவில்லை.


இப்படிப்பட்ட வீட்டில் பசியினால் வருந்தி ஒடுங்கிய வயிறையும் கைகளில் வளையல்களை அணிந்துள்ள பாணனின் மனைவியான பாடினி தன் கை விரல் நகங்களால் குப்பையில் உள்ள கீரையினைக் கிள்ளி அவற்றை உப்பில்லாமல் சமைக்கிறாள். உப்புக் கூட வாங்க முடியாத அளவிற்கு ஏழ்மையில் இருந்தது. எனவே உப்பில்லாமல் சமைத்த அந்த குப்பைக் கீரையை உண்பதைப் பார்த்தால் நினைப்பார்கள் என்று அஞ்சி தெருக் கதவினை அடைத்துவிட்டு சாப்பிட்டனர். இப்படிப்பட்ட பாணனின் வறுமைச் செய்திகளை இதன் மூலம் நன்கு அறியமுடிகின்றது.







சனி, 3 ஜூன், 2023

சிறுபாணாற்றுப்படை கடையெழு வள்ளல்களின் சிறப்புகள்


சிறுபாணாற்றுப்படை 


சிறுபாணாற்றுப்படை என்னும் இந்நூல் பத்துப்பாட்டில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் ஆவார்.

இவர் ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.

    கடையெழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்களாவனர்
 பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி போன்றோர்கள் ஆவர்.



பேகன்

பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.


பாரி

பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.

பாரியின் வள்ளன்மையைக் கபிலர் பல புறநானூற்றுப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், உரை விளக்கம் தேவைப்படாத ஒரு பாடல் இது:

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே. (புறம். 107)


காரி

திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.

இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை இதுதான்: ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்!

காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.


ஆய்

பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்!

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.


அதியமான்

அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான், அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.

இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக்கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலியுடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.

அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.


நள்ளி

மலைவளஞ் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.

நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.


ஓரி

சிறிய மலைகள் உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். இவர் விற்போரில் வல்லவராதலின், இவ் வள்ளலை "வல்வில் ஓரி" என்றும் அழைப்பர்.

ஒரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன். ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்!

ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.

இந்த கடையெழு வள்ளல்களின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற கழக இலக்கியங்களிலும் கூட காணலாம்.

வியாழன், 11 மே, 2023

குற்றியலுகரமும் அதன் வகைகளும்

 



குற்றியலுகரம் 

குறுகிய ஓசைகளை உடைய உகரம் குற்றியலுகரம் ஆகும்.

அதாவது உகரமானது தனது 1 மாத்திரை அளவில் இருந்து 1/2 மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பதே ஆகும்.

குற்றியலுகர எழுத்துக்கள் 

கு,சு,டு,து,பு,று 


குற்றியலுகரத்தின் வகைகள் 

குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு 6 வகையாகப் பிரிக்கலாம். அவையாவன,

1.நெடில்தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
போன்றவை ஆகும்.

1.நெடில்தொடர்க் குற்றியலுகரம் 
குற்றியலுகர எழுத்திற்கு முன் உள்ள எழுத்தானது நெடிலாக இருந்தால் அது நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

இது பொதுவாக இரண்டு எழுத்துக்களில் மட்டுமே வரும்.

எ.கா
         மாடு

 மாடு என்னும் சொல்லில் மா என்பது நெடில் எழுத்து .
டு என்பது குற்றியலுகர எழுத்து.

எனவே டு என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் மா என்னும் நெடில் எழுத்து வந்துள்ளதால் இது நெடல்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

2.ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் 
ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

அதாவது குற்றியலுகர எழுத்திற்கு முன் ஆய்த எழுத்து () வருவது ஆகும்.

எ.கா
         அஃது, இஃது, எஃகு, போன்றவை ஆகும்.

அஃது என்னும் சொல்லில் உள்ள என்பது ஆய்த எழுத்து.
து என்பது குற்றியலுகர எழுத்தாகும்.

எனவே து என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் என்னும் ஆய்த எழுத்து வந்துள்ளதால் இது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

3.உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் 
உயிரெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
          வரலாறு, அரசு, ஒன்பது, கயிறு
போன்றவை ஆகும்.

வரலாறு என்னும் சொல்லில் று என்பது குற்றியலுகர எழுத்தாகும். அதற்கு முன் உள்ள லா என்னும் உயிர்மெய் எழுத்தை பிரித்தால் ல்+அ எனப் பிரியும் இதில் உள்ள என்னும் எழுத்தானது உயர் எழுத்தாகும். எனவே இது உயிர்த்தொடர்க்
குற்றியலுகரம் ஆகும்.

4.வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய்யை அடுத்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
         பாக்கு, பேச்சு, பாட்டு, பற்று, உப்பு
போன்றவை ஆகும்.

பாக்கு என்னும் சொல்லில் கடைசியில் உள்ள கு என்பது குற்றியலுகர எழுத்தாகும் அதற்கு முன் உள்ள க் என்னும் எழுத்தானது வல்லின மெய் என்பதால் இது வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

5.மென்தொடர்க் குற்றியலுகரம் 
மெல்லின மெய்யை அடுத்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
         பண்பு, பந்து , அம்பு, கன்று, பஞ்சு, பங்கு போன்றவை ஆகும்.

பண்பு என்ற சொல்லின் கடைசியில் உள்ள பு என்னும் எழுத்து குற்றியலுகர எழுத்தாகும் அதற்கு முன் உள்ள ண் என்னும் எழுத்தானது மெல்லின மெய் ஆகும் எனவே இது மென்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

6.இடைத்தொடர்க் குற்றியலுகரம் 
 இடையின மெய்யைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
         எய்து, மார்பு, சால்பு, மூழ்கு போன்றவை ஆகும்.

எய்து என்னும் சொல்லின் கடைசியில் உள்ள து என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் ய் என்ற இடையின மெய் வந்துள்ளதால் இது இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.






வியாழன், 30 மார்ச், 2023

மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?

 நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். எப்படி மின்மினிப் பூச்சி ஒளிர்கிறது என்று🤔எனக்கும் இதே சந்தேகம் பல வருடம் உள்ளது. 

ஓர் இரவில் தீடீரென மின்மினிப் பூச்சியைப் பார்த்து வியந்தேன்😃 . மின் விளக்குகள் அனைத்தும் அனைந்திருக்க பச்சை நிறத்தில் பிரகாசமான ஒளி நின்று நின்று ஒளிர்ந்தது. 

எப்படி இந்தப் பூச்சி ஒளிர்கிறது என்று தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவலுடன் இருந்தேன். இணையத்தில் சென்று படித்ததில் மிகவும் வியப்புக்குள்ளானேன்.

இப்போது எதனால் ஒளிர்கிறது என்று தெரிந்துக்கொள்வோம்...

மின்மினிப் பூச்சியும் ஒரு சாதாரண பூச்சி(பூச்சிகள்) வகையைச் சார்ந்த ஓர் உயிரினம் தான்.  இதன் வயிற்றில் தான் ஒளி உமிழும் உறுப்பு அமைந்துள்ளது. இதன் வயிற்றில் நடக்கும் வேதிவினையே ( chemical reactions) ஒளி உமிழக் காரணமாகிறது. இதற்கு உயிர் ஒளி உமிழும் தன்மை என்று பெயர்.

இப்பூச்சிகளின் உடலில் லூசிஃபெரேஸ் என்னும் ஒளி உமிழ்தலைத் தூண்டும் நொதி ஒன்று சுரக்கிறது. இந்நொதியிலிருந்து உருவாகும் லூசிஃபெரின் என்னும் கரிமப்பொருள் கால்சியம், அடினோசைன் டிரை பாஸ்பேட், ஆக்ஸிஜனின் ஆகியவற்றுடன் வினைபுரிந்து ஒளி உண்டாகிறது.

உயிரினங்கள் உண்ணும் உணவானது அடினோசைன் டிரை பாஸ்பேட் என்னும் வேதிச் சேர்மத்தின் வடிவில்உடலில் சக்தியாக சேமித்து வைக்கப்படுகிறது.

மின்மினிப் பூச்சிகள் ஒளி உருவாக்க தேவையான வேதிப்பொருட்களுடன் ஆக்டிரியாச் சேர்த்து வேதிவினையின் தொடக்கம் மற்றும் முடிவைக் கட்டுப்படுத்துகிறது.


அதாவது ஆக்ஸிஜன் இருக்கும்போது ஒளி வெளிப்படும். ஆக்ஸிஜன் இல்லாத போது ஒளி வெளியிடப்படாது.


மின்மினிப் பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. அவை உடலின் வெளிப்பகுதியிலிருந்து உட்புறச் செல்களுக்கு டிராக்கியோல்கள் எனப்படும் தொடர் குழாய்கள் மூலம் ஆக்ஸிஜனைப் பெறுகின்றன.


பொதுவாக விளக்குகள் எரியும் போது ஆற்றலானது ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படும். அதாவது ஒரு பல்ப் எரியும் போது 10 சதவீதம் ஒளி ஆற்றலையும், 90 சதவீதம் வெப்ப ஆற்றலையும் வெளியிடுகிறது.


ஆனால் மின்மினிப் பூச்சிகள் உடலில் நடைபெறும் வேதியாற்றல் முழுவதும் (100 சதவீதம்) ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது. வெப்ப சக்தி வெளியிடப்படுவதில்லை. ஆதலால் மின்மினிப் பூச்சிகள் குளிர்ந்த விளக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.


இப்பூச்சிகளின் பல்வேறு இனங்கள் வெவ்வேறு கால அளவுகளில் பல்வேறு வண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.

திருக்குறளில் உளவியல் சிந்தனைகள்

  thirukkural-ulaviyal-sinthanaigal-tamil.jpg திருக்குறளில் உளவியல் சிந்தனைகள் – மனித மனதை வழிநடத்தும் திருவள்ளுவரின் அறிவியல் அறிமுகம் உலக ...